பல்கலை மானியக் குழு பரிந்துரை கல்வி ஆண்டை செப்டம்பரில் தொடங்கலாம்: நீட் நுழைவுத்தேர்வு எப்போது?

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வியாண்டில் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் ஊரடங்கு காரணமாக ஆன்லைன் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்க யுஜிசி இரு குழுக்களை அமைத்துள்ளது. இதில் ஒரு குழு, தேர்வுகளை எவ்வாறு நடத்துவது மற்றும் வரும் கல்வியாண்டை எப்போது தொடங்குவது என்பது குறித்தும், மற்றொரு குழு ஆன்லைன் தேர்வு குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்துள்ளன. இந்த அறிக்கையில், வரும் கல்வியாண்டை ஜூலை மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதத்தில் தொடங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் உரிய வசதிகள் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் தேர்வுகளை நடத்தலாம் என்றும் இல்லாதபட்சத்தில் வழக்கமான தேர்வுகளை நடத்த ஊரடங்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இரு அறிக்கைகளையும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்த வாரத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சக உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘‘இரு குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படாது. உரியவற்றை ஆய்வு செய்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும். கொரோனா பாதிப்பால் நுழைவுத்தேர்வுகள் மற்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள பாடப்பிரிவு தேர்வுகள் நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை பற்றி இரு குழுக்களும் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன. பொதுவாக நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகள் ஜூனில் நடத்தப்படும். தற்போதைய சூழலில் அதை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்’’ என்றனர். எனவே மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பதும் அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

Related Stories: