சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகள் வெறிச்சோடியது; கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது...சில கடைகளுக்கு விலக்கு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊடரங்கு அமல்  படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊடரங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களில் சிலர் பைக், ஸ்கூட்டர் மற்றும்  கார்களில் வெளியே சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் மற்றும் நூதன தண்டனை விதித்தாலும்,  நாளுக்கு நாள் பொதுமக்கள் வெளியே வருவது அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறையவில்லை.

குறிப்பாக காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள வாகனங்களில் மனைவி, குழந்தைகளுடன் குடும்பத்துடனும்,  நண்பர்களுடனும் செல்வது கூட்ட நெரிசலை அதிகரித்துள்ளது. தமிழக அரசு, போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் சமூக இடைவெளியை  கடைபிடியுங்கள் என்று சொல்லியும் நகர்புறங்களில் பயனில்லை. இதனால் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறி்ப்பாக சென்னை, கோவை, மதுரை  உள்ளிட்ட நகரப்பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. சென்னையில் மட்டும் தினசரி 50க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுபோன்ற நகர் பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு நேற்று முன்தினம் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி சென்னை,  கோவை, மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இன்று (26ம் தேதி) காலை 6 மணியில் இருந்து 29ம் தேதி இரவு 9 மணி வரை தொடர்ந்து 4 நாட்களும்,  சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதில் சேலத்தில் நேற்றே  ஊரடங்கு தொடங்கிவிட்டதாக அந்த மாவட்ட கலெக்டர் அறிவித்து விட்டார்.

இந்நிலையில், சென்னை, கோவை, சேலம், திருப்பூர், மதுரை ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. கடலூர், திருவாரூர், தென்காசி,  விழுப்புரம், நாகை, தஞ்சை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததுள்ளது. இந்த 4 நாட்களும் மருந்து கடைகள்,  மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், பத்திரிகைகள், தொலைக்காட்சி பணியாளர்களை தவிர வேறு யாரும் வெளியே வரக்கூடாது. இந்த 4 நாட்களும் மளிகை  கடை, காய்கறி கடை, பேக்கரி உள்ளிட்ட எந்த கடைகளும் திறந்து இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: