அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள் குழந்தைகளை முத்தமிட்டு கொஞ்சுவதை தவிருங்கள்: கொரோனா தடுக்க சுகாதாரத்துறையினர் அட்வைஸ்

வேலூர்: இந்தியா உட்பட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமூக விலகல் மட்டுமே அவசியமாகிறது. இதற்காக இந்தியாவில் வரும் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே சென்று வருபவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை முத்தமிட்டு கொஞ்சுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா பரவாமல் தடுக்க அனைவரும் அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மேலும் முகத்தில் கைகள் வைப்பதை முடிந்த வரை தவிர்ப்பது அவசியம். ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த பிறகும், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

இந்நிலையில் கட்டிட தொழில் உட்பட அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஊரடங்கு உத்தரவில் கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் மளிகை, காய்கறி கடைகளுக்கும் சென்று வருகிறோம். எனவே வெளியே சென்று வருபவர்கள் குளித்துவிட்ட பிறகுதான் வீட்டிற்கு உள்ளே செல்ல வேண்டும். அதேபோல் வீட்டில் உள்ள குழந்தைகளை முத்தமிட்டு கொஞ்சுவதை தவிர்க்க வேண்டும்.  முடிந்தவரை குழந்தைகளை தொடாமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும் கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பதில் பலருக்கு மனஉளைச்சல் ஏற்படலாம். ஆனால், அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும்போது, குழந்தைகளின் நலனை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். மக்கள் அனைவரும் விழிப்புடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை முழுவதுமாக ஒழிக்க முடியும்’ என்றனர்.

Related Stories: