முழு ஊரடங்கு எதிரொலி: நாளை முதல் 4 நாட்களுக்கு கோயம்பேடு காய்கறி சந்தை விடுமுறை...வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மார்ச் 24ம் தேதி  முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர  மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் வெளியில் வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், பொதுமக்கள் இந்த  கட்டுப்பாட்டை முறையாக கடைபிடிக்காததன் விளைவாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.

குறிப்பாக, ஊரக பகுதிகளை காட்டிலும் சென்னை போன்ற மாநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், மே 3ம்  தேதி ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில்  கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சென்னை, கோயம்புத்தூர்,  மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் வரும் 26ம் தேதி  முதல் 28ம் தேதி வரையும் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும்  அனுமதி இல்லை. இருப்பினும், கோயம்பேடு மார்க்கெட்டுகள் கட்டுபாடுகள் உடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. நடமாடும் காய்கறி மற்றும்  பழக்கடைகளுக்கு அனுமதி. இந்த நாட்களில் மற்ற கடைகளுக்கு இயங்க அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனாவை கட்டுபடுத்த நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 4 நாட்கள் விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு காய்கறிச் சந்தை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், நாளை முதல் புதன் கிழமை வரை கோயம்பேடு  சந்தையில் கடைகள் திறக்கப்படாது. மொத்த விற்பனை கடைகள் மட்டும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: