கொரோனா வைரஸ் அபாயம் உள்ளதால் கோடை விடுமுறை ரத்தை திரும்ப பெற வேண்டும்: தலைமை நீதிபதிக்கு லா அசோசியேஷன் கோரிக்கை

சென்னை: கொரோனா பரவல் அபாயம் இருப்பதால் கோடை விடுமுறையில் கீழமை நீதிமன்றங்கள் செயல்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு சென்னை லா அசோசியேசன் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தலைமை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு லா அசோசியேசன் தலைவர் எல்.செங்குட்டுவன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா  சமூக பரவலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.  உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற  பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. முக்கிய வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மே 3ம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளது.  இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மே 2 முதல் தொடங்கும் கோடை விடுமுறையை ரத்து செய்து உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளார். மேலும், கோடை விடுமுறையில் நீதிமன்றங்கள் செயல்படும் என்றும் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, கீழமை நீதிமன்றங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் கீழமை நீதிமன்றங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகிவிடும். எனவே, வக்கீல்கள், வழக்காடிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு கோடை விடுமுறையை ரத்து செய்ததை திரும்ப பெற வேண்டும். நீதிமன்ற பணி நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் நீதிமன்றங்களை செயல்பட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: