கொரோனா ஊரடங்கு தந்த துயரம் மனைவியின் சடலத்தை அடக்கம் செய்ய வழியில்லாமல் பரிதவித்த தொழிலாளி: ரணமாகும் எளியோர் வாழ்க்கை போராட்டம்

சேலம்: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், எளிய மக்களின் வாழ்க்கை போராட்டமாகி உள்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில், இறந்த மனைவியின் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் தொழிலாளி பரிதவித்த சம்பவம் சேலத்தில் அரங்கேறி உள்ளது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இது ஒரு புறமிருக்க, உறவுகள் இறந்தால் உரிய இறுதிச்சடங்கு நடத்தி, அடக்கம் செய்வதற்கு கூட வழியில்லாத அவலத்தை ஏழை தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது கொரோனா. இதற்கு உதாரணமான நிகழ்வுகள், நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. இந்த வகையில் சேலத்தில் நடந்த சம்பவம் இதயங்களை ரணமாக்கியுள்ளது.

பீகாரை சேர்ந்த 35 வயது கூலித்தொழிலாளி ஒருவர், பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள விஜயமங்கலத்தில் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி உள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து அங்கு அழைத்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தற்போது 5 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இப்படிப்பட்ட சூழலில் 30 வயது மனைவிக்கு, கேன்சர் இருப்பது 2 மாதத்திற்கு முன்பு தெரியவந்துள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தவர், கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலாவதற்கு முதல்நாள், மனைவியை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார். 2 குழந்தைகளையும் விஜயமங்கலத்தில் தெரிந்தவர் வீட்டில் விட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவால் எங்கும் செல்ல முடியாத நிலையில், கையில் இருந்த பணத்தை வைத்து 20 நாட்களுக்கும் மேலாக மனைவியை கவனித்து வந்துள்ளார்.

நூறு ரூபாய் கூட கையில் இல்லாத நிலையில், நோய்வாய்ப்பட்ட மனைவி 3 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவியின் இறப்பால் இதயம் உடைந்து குலுங்கி அழுதவருக்கு, அவரது சடலத்தை எப்படி அடக்கம் செய்வது என்று தெரியவில்லை. மொழி தெரியாததால் தனது நிலையை யாருக்கும் எடுத்துச் சொல்லவும் முடியவில்லை. இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றவர், அங்கிருந்த போலீசாரின் கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுதுள்ளார். விவரம் அறிந்த போலீசார், கருணையுடன் அவரை தேற்றியதோடு, ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் லைப் டிரஸ்ட் சகோதரி கலைவாணியிடம் விவரத்தை கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார், தன்னார்வலர்களின் உதவியோடு சடலத்தை முன்னின்று அடக்கம் செய்து, இறுதிச் சடங்குகளை நடத்தி உள்ளார்.

Related Stories: