கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி ஆபத்தை உணராமல் காட்டுப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள்: தடுக்க முடியாமல் தமிழக- ஆந்திர போலீசார் தவிப்பு

ஆம்பூர்: கொரோனா வைரஸ் பரவி தற்போது உலகம் முழுவதும் உயிர்பலி எண்ணிக்கையும், நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இந்த நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூடி உள்ளது. அந்த இடங்களில் போலீசார் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை, ரயில், விமான சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் சிக்கி உள்ளவர்கள் நடந்தே மூட்டை முடிச்சுகளுடன் தங்களது ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். மாநில எல்லைகளை கடந்து செல்ல கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதால் தற்போது தமிழக- ஆந்திர பகுதிகளை சேர்ந்தவர்கள் அடர்ந்த வனப்பகுதிகளில் ஒத்தையடி பாதைகளை கண்டுபிடித்து ஆபத்தை உணராமல் செல்கின்றனர்.

ஆம்பூர் தாலுகா கிராமங்களில் வசிப்பவர்கள் அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு செல்ல அரங்கல் துருகம் அருகே மத்தூர்கொல்லை வழியாக மாத கடப்பா சென்று அங்கு இருந்து ஆந்திராவுக்கு காட்டு வழிகளில் செல்கின்றனர். மேலும், ஆம்பூர் அடுத்த சுட்டக்குண்டா வழியாக ஆந்திராவின் பெத்தூர் சென்று அங்கிருந்து அந்த மாநிலத்தின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். இதேபோல் மிட்டாளம் மற்றும் மசிகம் ஊராட்சி சாரங்கல் வழியாக ஆந்திராவின் கெட்டூர் கெரகப்பள்ளி பகுதிகளின் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளுக்கு காட்டுவழிப் பாதை தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. காட்டுப்பகுதியில் அவர்கள் செல்வதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக, ஆந்திர போலீசார் திணறி வருகின்றனர்.

Related Stories: