உலகளவில் கொரோனா பலியில் முதல் இடம்; அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க ஆணை கையெழுத்து...அதிபர் ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர்களில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 42,514 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 792,759 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் பேட்டியளித்த அதிபர் டிரம்ப் கூறியதாவது: கொரோனா பலி எண்ணிக்கையில் நாம் முதல் இடத்தில் இல்லை. சீனாதான் முதல் இடத்தில் உள்ளது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சுகாதாரத்தில் மேலோங்கி இருக்கும் இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் எல்லாம் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், சீனாவில் மட்டும் 0.33. சீனாவில் அதிகாரப்பூர்வ பலி எண்ணிக்கை நம்பும் படியாக இல்லை. அது உங்களுக்கும், தெரியும், எனக்கு தெரியும், அவர்களுக்கும் தெரியும். ஆனால் அந்த தகவலை ஊடகங்கள் வெளியிட விரும்பவில்லை. ஏன்? ஒருநாள் நான் இது பற்றி விளக்குவேன். அமெரிக்காவில் இறப்பு வீதம், மேற்கத்திய நாடுகளைவிட குறைவாக உள்ளது.  

சீனாவின் கொரோனா பலி எண்ணிக்கையில் 1,300 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். இதனால் சீனாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொரோனா பலி எண்ணிக்கை தற்போது 4,600 என தெரிவிக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த சீனா, முதலில் அவசர நிலையில் கணக்கெடுப்பு சரியாக இல்லை. மருத்துவமனையில் இறந்தவர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். வீட்டில் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது என்றார்.

இந்நிலையில், கண்ணுக்கு தெரியாத வைரஸ் தாக்குதல், அமெரிக்க குடிமக்களின் வேலையைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஆணை கையெழுத்தாக உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Stories: