மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் திட்டமோ அல்லது நிறுத்தும் திட்டமோ ஏதும் இல்லை: அமைச்சர் ஜிதேந்திர சிங்

டெல்லி: ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். ஓய்வூதியதாரர்களின் நலனை பூர்த்தி செய்வதில் உறுதி பூண்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஓய்வூதியத்தை குறைக்கவோ, நிறுத்தவோ மாட்டோம் என அவர் உறுதி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் நாடுமுழுவதும் தீவிரமாகப் பரவுவதையடுத்து, கடந்த மாதம் 25-ம் தேதி முதல் லாக்டவுனை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த லாக்டவுன் காரணமாக தொழிற்சாலை,வர்த்தக நிறுவனங்கள், கடைகள்,ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டதால் ஏழைகள் , கூலித்தொழிலாளிகள், நடுத்தர குடும்பத்தினர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர்.

மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சில முக்கியநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.பி.க்கள் ஊதியம் குறைக்கப்பட்டது, தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்து, பல்வேறு துறைகளில் உள்ள மூத்த உயர் அதிகாரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஊதியமும் சிறிதளவு குறைக்கப்பட்டது. பல துறைகளில் உள்ள அதிகாரிகள் தாங்களாகவே வந்து ஊதியத்தைக் குறைத்துக்கொண்டனர். இதில் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றோரின் ஓய்வூதியமும் 20 சதவீதம் குறைக்கப்படும் என்றும் சிறிது காலத்துக்கு நிறுத்திவைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி பரபரப்பாகியது.

இதனால் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் ஒருவிதமான கலக்கமான மனநிலை காணப்பட்டு வருகிறது. ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல என்று மத்திய இணை அமைச்சர்ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். அவர் கூறியதாவது; மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் திட்டமோ அல்லது நிறுத்தும் திட்டமோ ஏதும் இல்லை. இதுபோன்று பல்வேறு வதந்திகள் கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் பரவி வருகிறது. மாறாக ஓய்வூதியதாரர்கள் நலனில் மத்திய அரசு முழுமையாக அக்கறை கொண்டு செயல்படுகிறது “ எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: