டெல்லியில் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவதால், ஊரடங்கில் தளர்வு அளிக்க முடியாது: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவதால், ஊரடங்கில் தளர்வு அளிக்க முடியாது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளிடையே பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு மட்டும் இதுவரை 3,648  பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து டெல்லியில் 1893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்; தற்போது உள்ள சூழ்நிலையில் டெல்லியில் ஊரடங்கை தளர்க்க முடியாது. குறிப்பாக கொரோனாவுக்கு மையப்புள்ளியாக இருக்கும் பகுதிகளில், ஊரடங்கில் தளர்வு அளிக்க முடியாது. தற்போதைய நிலையில் ஊரடங்கு அவசியமாகிறது.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 186 பேருக்கும், அறிகுறி ஏதும் இல்லை. அவர்களுக்கு கொரோனா இருந்ததே தெரியவில்லை. இது மிகவும் கவலை அளிக்கிறது. டெல்லியில் தொடர்ந்து கொரோனா பரவினாலும், கட்டுக்குள் உள்ளது. இதனால், யாரும் அச்சப்பட தேவையில்லை. டெல்லி மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறோம். இதனால், ஊரடங்கில் தளர்வு அளிக்க முடியாது என கூறியுள்ளார்.

Related Stories: