கொரோனாவிற்கு எதிராக தொடரும் மருத்துவர்கள் போராட்டம்: தேனியில் பாதிப்பில் இருந்து 18 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்தொற்றிலிருந்து மீண்டவர்கள் இருவாரங்கள் வீட்டுக்கண்காணிப்பில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25 பெருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது எனவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1267-ஆக உயர்ந்துள்ளது என கூறினார். தற்போது 62 பேர் குணமடைந்து வீடு திரும்ப உள்ளார்கள் எனவும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 180-ஆக உயர்ந்துள்ளது என கூறினார்.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணி்கை 15-ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பழனிசாமி மாலையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தேனி மாவட்டத்தில் இதுவரை 41 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் போடியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்தார். மீதம் 40 பேருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் 18 பேர் தொடர் சிகிச்சை காரணமாக குணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில் டீன் இளங்கோவன் முன்னிலையில் ஓரு வாகனத்தில் இருவர் வீதம் 9 வண்டியில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களில் 8 பேர் போடி, 3 பேர் பெரியகுளம், 4 பேர் அல்லிநகரம், கம்பம், சின்னமனூர், உத்தமபாளையத்தைச் சேர்ந்த தலா ஒருவர் வீதம் ஆவர். வீட்டிற்குச் சென்றாலும் அங்கு இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி தொடர் சிகிச்சை அளிக்கப்படும். அதன் பின்பு மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலரும் குணமடைந்தால் ஹாட்ஸ்பாட் பகுதியில் இருந்து அடுத்த நிலைக்கு மாற வாய்ப்புள்ளது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: