பட்டியலில் 22-வது மாநிலமாக சேர்ந்தது மேகலாயா; கொரோனாவால் மாநிலத்தில் முதல் முறையாக மருத்துவர் ஒருவர் பலி...முதல்வர் சங்மா அறிவிப்பு

ஷில்லாங்: கொரோனா தாக்குதலால் மேகலாயா மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா   வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1076 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.  கொரோனாவால், இதுவரை 377 பேர் உயிரிழந்த நிலையில், 1306 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 60 -வது இடத்தில் இருந்த இந்தியா  19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் 21 மாநிலங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வரிசையில் 22-வது மாநிலமாக மேகலாயா சேர்ந்துள்ளது. மேகலாயா மாநிலத்தில்  முதன் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு 69 வயதான மருத்துவர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 2.45 மணிக்கு உயிரிழந்துள்ளதாக, அம்மாநில முதல்வர் கன்ராட் சங்மா அறிவித்துள்ளார். மாநிலத்தில்  முதல்முறையாக பாதித்த மருத்துவர் உயிரிழந்துள்ளார். இதுவரை வேறு யாருக்கும் மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2687 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 178 பேர் உயிரிழந்துள்ளனர். 259 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 1561 பேருக்கு தொற்று பாதிப்புடன் டெல்லி    2ம் இடத்தில் உள்ளது. 30 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த வாரம் வரை இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம் நேற்று முன்தினம் முதல் 3-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1204 பேருக்கு கொரோனா பாதிப்பு   உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் குணமடைந்துள்ளனர்.

Related Stories: