பிரான்ஸில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பலி; வரும் மே 11-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு...அதிபர் மேக்ரான் அறிவிப்பு

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் மே 11 வரை ஊரடங்கை நீட்டித்து அதிபர் இம்மானுவேல் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் முதன் முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி  வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.19 லட்சத்தை  தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 119,599 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,923,858 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 444,017 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் 4-வது இடத்தில் உள்ளது. பிரான்ஸில் இதுவரை கொரோனாவால் 14,967 உயிரிழந்துள்ளனர். 136,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு 574 பேர் உயிரிழந்துள்ளனர். 27,718 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நாட்டு மக்களுடன் உரையாற்றி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ‘இந்த தொற்று நோய் நிலைப்பெற தொடங்கியுள்ளது. எனினும், நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது என கூறினார். எனவே, கொரோனா வைரசை  எதிர்கொள்ள வரும் மே 11-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்தார். நோய் பரவல் குறைய தொடங்கியபின்பு ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் கூறினார்.

மேலும், வரும், மே 11-ம் தேதி முதல் பள்ளி கூடங்கள் செயல்பட தொடங்கும். ஆனால், உணவு விடுதிகள் மற்றும் கஃபேக்கள் தொடர்ந்து மூடியிருக்கும். அடுத்த உத்தரவு வரும்வரை ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுடனான எல்லைகள்  தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றார். வரும் மே 11-ம் தேதி முதல் புதிய அத்தியாயம் தொடங்கும். அது முன்னேற்றம் தரும் வகையில் இருக்கும். நிலைமைக்கு ஏற்ப விதிமுறைகள் பிறப்பிக்கப்படும்’ என்றும் அதிபர் மேக்ரான்  கூறியுள்ளார்.

Related Stories: