துணை முதல்வரின் சொந்த ஊரில் அரசு அறிவிப்பு மீறல்: திறந்த அரை மணி நேரத்தில் கிருமிநாசினி சுரங்கப்பாதை மூடல்

பெரியகுளம்: தமிழக அரசின் உத்தரவை அறியாமல், பெரியகுளத்தில் திறக்கப்பட்ட கிருமிநாசினி சுரங்கப்பாதையை, அரை மணி நேரத்தில் மூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் மருத்துவமனை, காய்கறி மார்க்கெட்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக வரும் இடங்களில் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைத்து வந்தனர். பொதுமக்கள் மீது கிருமிநாசினி தெளிப்பதால், அவர்களுக்கு பல்வேறு சருமப்பிரச்னை உருவாவதாக கூறி, தமிழகத்தில் கிருமிநாசினி சுரங்கப்பாதை திறக்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அறியாமல், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தென்கரையில் கிருமிநாசினி சுரங்கப்பாதை திறக்க, நகராட்சி நிர்வாகத்தினர் நேற்று முன்தினம் இரவு ஏற்பாடு செய்தனர். நேற்று காலை 8 மணிக்கு கிருமிநாசினி சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. பொதுமக்களும் அதன் வழியாக சென்று வந்தனர். அவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவை அறிந்து, கிருமிநாசினி சுரங்கப்பாதை திறக்கப்பட்ட 30 நிமிடத்தில், அதன் இயக்கத்தை சுகாதாரத்துறையினர் நிறுத்தி வைத்தனர். தமிழக அரசின் உத்தரவை அறியாமல், நகராட்சி நிர்வாகத்தினரும், அதிமுகவினரும் கிருமிநாசினி சுரங்கப்பாதையை திறந்த அரை மணி நேரத்தில் மூடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: