ராஜபாளையம் அருகே கருப்பட்டி காய்ச்சும் பணி கோடைமழையால் பாதிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் பெய்த கோடைமழையின் காரணமாக பதநீர் பானைகளில் மழைநீர் தேங்கியதால் கருப்பட்டி காய்ச்சும் பணிகள் பாதிக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் பதனீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சும் தொழில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியை சேர்ந்த சுமார் 150 குடும்பங்கள் இந்த தொழிலை செய்து வருகின்றன. முதல் நாள் பிற்பகலில் மண் பானையில் சுண்ணாம்பு தடவி, பனை மரத்தில் கட்டி பாளையை வெட்டி விடுவர். இரவு முழுவதும் பாளையில் இருந்து சொட்டு சொட்டாக வடிந்து காலையில் பானை ஒன்றுக்கு சுமார் 2 லிட்டர் வரை பதனீர் கிடைக்கும்.

இது போன்று பதனீர் இற்ககும் தொழிலாளி ஒருவர் நாள் ஒன்றுக்கு சுமார் 20 மரங்கள் வரை ஏறி பதனீரை சேகரிப்பார். பின்னர் அதை பெண்கள் உதவியுடன் காய்ச்சி கருப்பட்டியாக்கி வியாபாரிகள் அல்லது தமிழக அரசின் கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தி மையத்தில் விற்பனை செய்து விடுவார்.

தற்போது ஒரு கிலோ கருப்பட்டி ரூ. 250 முதல் ரூ. 300 வரை விலை போகிறது. 2 நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக அப் பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த பதனீர் பானைகள் அனைத்தும் மழை நீரால் நிரம்பியது. இதனால் கருப்பட்டி காய்ச்சும் பணிகள் பாதிக்கப்பட்டதாக பனை தொழிலாளிகள் தெரிவித்தனர். கோடை காலத்தில் மட்டுமே நடக்கும் இந்த தொழிலும் கோடை மழையின் காரணமாக தடைபடுவதால் நபர் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பனை தொழிலாளர்கள் தெரிவித்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என சொக்கநாதன் புத்தூர் பகுதி பனை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: