கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி கைதிகளை உறவினர்கள் சந்திக்க 30ம் தேதி வரை தடை நீட்டிப்பு: சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் தமிழக சிறைகளில் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை வருகிற 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான 5 தனிச்சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 88 ஆண்களுக்கான கிளைச் சிறைகள், 8 பெண்கள் கிளைச் சிறைகள், ஆண்களுக்கான 2 தனி கிளைச்சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளி, 3 திறந்தவெளிச் சிறை என மொத்தம் 138 சிறைகள் உள்ளது.  இங்குள்ள கைதிகளை உறவினர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சந்திக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முக்கிய குற்றவாளிகளை வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக கடந்த 18ம் தேதி முதல் சிறையில் கைதிகளை 2 வாரம் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சந்தித்து பேச தடை விதித்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது. தற்போது இந்த தடை வருகிற 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் 2300க்கும் மேற்பட்டவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கைதிகள் மூலம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சந்தித்து பேச வரும் 30ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.  சிறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: