ஊரடங்கு காரணமாக ஈஸ்டர் திருநாள் நடைபெறாமல் களையிழந்து தேவாலயங்கள்; இணையதளத்தில் கிறிஸ்துவ மக்கள் வழிபாடு

சென்னை: ஊரடங்கு காரணமாக ஈஸ்டர் திருநாள் நடைபெறாமல் தேவாலயங்கள் களையிழந்து காணப்படுகின்றன. ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது. இது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான திருநாளாகும்.

இது ஆண்டுதோறும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளியில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். உலக முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்களால் இவ்விழாவின்போது தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக சென்னையில் உள்ள தேவாலயங்களில் வழிபாடு எதுவும் நடத்தப்படவில்லை. வீட்டில் இருந்தபடியே இணையதளம் வாயிலாக கிறுஸ்துவ மக்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை விரட்டியடிக்க ஈஸ்டர் தினத்தில் மக்கள் வீட்டில் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என பங்குதந்தை தலைவர் லுயூஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ராயபுரத்தில் உள்ள தூய ஆரோக்கிய நாதர் தேவாலயத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களுடன் ரூ.500 வழங்கி செய்தியாளர்களிடம் பேசிய லுயூஸ் இவ்வாறு தெரிவித்தார்.

இதனைபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் யாரும் பங்கேற்காமல் ஈஸ்டர் திருநாள் வழிபாடு நடைபெற்றது. பங்குதந்தையர் மட்டுமே பங்கேற்றனர். ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள தேவாலயங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இது கிறிஸ்துவ மக்கள் மத்தியல் பெரும் கவலையாக அமைந்துள்ளது.

Related Stories: