ஊரடங்கை நீட்டிக்கலாமா?; புதிய திட்டத்தை அமல்படுத்தலாமா?; அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் முடக்கத்தை நீட்டிப்பதா?, வேண்டாமா? என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இது, வரும் 14ம் தேதியுடன் முடிகிறது. முடக்கத்தை அறிவித்து 16 நாட்கள் கடந்த நிலையில்,  கொரோனா பரவல் அதிகமாகி இருக்கிறதே தவிர, குறையவில்லை.

குறிப்பாக, ‘சமூக தொற்று’ எனப்படும் அபாயகரமான 3ம் நிலையை நாடு எட்டிக் கொண்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், மகாராஷ்டிரா உட்பட அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை மாநிலங்கள் முடக்கத்தை நீட்டிக்க மத்திய  அரசை வலியுறுத்தி வருகின்றன. அதோடு, மக்களின் விருப்பத்துக்காக முடக்கத்தை தளர்த்தினால், மிகப்பெரிய உயிர்ச் சேதத்தை நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது.

 

இதற்கிடையே, முடக்கத்தை இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக ஒடிசா அரசு தன்னிச்சையாக நேற்று முன்தினம் அறிவித்து விட்டது. மேலும், முடக்கத்தை வரும் 14ம் தேதிக்குப்பின் நீட்டிப்பதா? வேண்டாமா? அல்லது பாதிப்பு அதிகமாக  இருக்கும் பகுதிகளில் மட்டும் முடக்கத்தை அமல்படுத்தி விட்டு, மற்ற பகுதிகளில் தளர்த்தலாம் என்ற யோசனை கூறப்பட்டு வருகிறது. இது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம்  ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்,  தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்.

ஏற்கனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் மோடி கடந்த மாதம் 20ம் தேதியும், கடந்த 2ம் தேதியும் இருமுறை ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதில் முதல்வர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில்,  முடக்கத்தை நீட்டிப்பது பற்றிய இறுதி முடிவை இன்றோ, நாளையோ, நாளை மறுதினமோ மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: