கமுதி: கமுதி மற்றும் முதுகுளத்தூர் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் களப்பணியில் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாட்சியர் செண்பகலதா, பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி ஆகிய இருவரும் இணைந்து, கிருமி நாசினியை கமுதி பகுதி முழுவதும் தினமும் தெளிக்க வைப்பதுடன், அதனை அவ்வப்போதும் கண்காணித்து வருகின்றனர். மேலும், காய்கறி மற்றும் பலசரக்கடைகளை கண்காணித்து கூட்டம் சேர்ந்தால் உடனடி நடவடிக்கை எடுத்தும், வெயில் என்று பாராமல் ஒலிப்பெருக்கி மூலம் வெளியே வரக்கூடாது என்று பொதுமக்களை எச்சரிக்கை செய்து வருகின்றனர். ஆதரவற்றோருக்கு உணவுகள் கிடைத்திடவும் வழிவகை செய்து வருகின்றனர்.