போலீசாரின் தடையை மீறி பறக்கவிடப்பட்ட பட்டம் மாஞ்சா நூல் கழுத்தறுத்ததால் கம்பெனி ஊழியர் படுகாயம்: 14 தையல்களுடன் தீவிர சிகிச்சை

சென்னை:   சென்னை முழுவதும் மாஞ்சா நூலில் பட்டம் விடுவதற்கு போலீசார் தடைவித்துள்ளனர். மீறினால், குண்டர் சட்டம் பாயும் என்று போலீஸ் கமிஷனர் ஏ,கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும், அதை மீறி பல இடங்களில் மஞ்சா நூலில் பட்டம் விடப்படுகிறது. தற்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பலர் வீட்டின் மொட்டை மாடியில் மஞ்சா நூலில் பட்டம் விடும் சம்பவம் நடந்து வருகிறது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி பிள்ளை தெருவை சேர்ந்தவர் புவனேஷ் (25). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இவர், பணி முடிந்து நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணி அளவில் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அண்ணாசாலை மசூதி அருகே சென்றபோது, காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல்,  புவனேஷ் கழுத்தை அறுத்து ரத்தம் வழிந்தோடியது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ராயப்ேபட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் 14 தையல்கள் போட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: