மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு பணிக்கு சன் டி.வி குழுமம் சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சன் டி.வி குழுமம் சார்பில் ரூ.10 கோடி கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த  ஒருவாரமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவும் மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த  21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.

படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே கொரானா தொற்றை தடுக்க, நிவாரண பணிகளுக்கு  செலவிட நிதி திரட்டும் பணியில் மத்திய,  மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. பிரதமர் பாதுகாப்பு நிதி, மாநில முதல் அமைச்சர் நிவாரண நிதி என்ற பெயரில்  நிதி திரட்டப்படுகின்றன. அதன் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள், நடிகர்கள், என பல்வேறு  பிரபலங்கள் முதலமைச்சர், பிரதமர் நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, சன் டி.வி குழுமம் தமது பலகோடி நேயர்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள சன் டிவி நேயர்களை கொரோனா விழிப்புணர்வு சென்றடைகிறது. இதனை  தொடர்ந்து, சன் டிவி குழுமம் சார்பில் ரூ.10 கோடி கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடியுடன் சன் டி.வி குழுத்தின் 6 ஆயிரம் பணியாளிரின் ஒருநாள் ஊதியமும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள  கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியாக தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிபுரிந்து வரும் தன்னார்வ அமைப்புகளுடன் சன் குழுமம் பணியாற்றும் என்றும் திரைத்துறை, தொலைக்காட்சியில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கும் சன் டிவி குழுமம் நிதியுதவி அளிக்கும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: