கொரோனா தடுப்பு பணிக்கு மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து1 கோடியை அரசு எடுத்துக்கொள்ளும்: முதல்வர் எடப்பாடி

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்கு நிதி சேர்ப்பதற்காக, எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுக்கு தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முன்தினம் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வரும் எம்எல்ஏக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடியை தமிழக அரசு கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க அரசு பயன்படுத்திக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய டிவிட்டரில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த நிதியினை, நிர்வாகம் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரம் இல்லை என்றும், இந்த பிரச்னையில் முதலமைச்சர் கவனிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான், சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின்படி, வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்த நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். ஏற்கனவே கொரோனா தொற்றுநோய் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு, அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் 25 லட்சம் அந்தந்த தொகுதியில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.   மேலும், கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில், மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 1 கோடியை, மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: