ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது கூட ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி விறுவிறு: இரவு, பகல் பாராமல் விடிய விடிய நடக்கிறது

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் கட்டுமானப் பணிக்கு 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த 2018ல் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுமான பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தற்போது வரை நினைவிட வளாகத்தில் அருங்காட்சியகம், அறிவுசார் மையம், நடைபாதை, பூங்கா, வாகன நிறுத்தம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்தநிலையில், நினைவிடத்தின் முக்கியமான கட்டிடத்தில் பீனிக்ஸ் பறவை தோற்றத்தை 15 மீட்டர் உயரத்தில் அமைக்கும் பணி சில மாதங்களாக நடந்து வந்தது.

 இதற்காக துபாயில் இருந்து கட்டுமான பொருட்கள் வரவழைக்கப்பட்டன. இந்த பீனிக்ஸ் பறவையை பொருத்தும் பணிக்கும் துபாயில் இருந்து பொறியாளர்களும், ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர்.   தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. தொடர்ந்து நினைவிடம் முழுவதும் இத்தாலி மார்பிள் பதிக்கப்பட உள்ளது. இதேபோன்று, எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் உள்ள குதிரை சிலை புதுப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது. இப்பணிகளில் ஜார்கண்ட், ஒடிசா மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 30ம் தேதியுடன் பணிகளை முடித்து செய்தி ஒளிபரப்பு துறையிடம் ஒப்படைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் மார்ச் 24 முதல் கட்டுமான பணிகள் உட்பட அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

பணியாளர்கள் யாரும் பணிக்கு வர வேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால், விதிமுறைகளை மீறி ஜெயலலிதா நினைவிடத்தில் மட்டும் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ள ஊழியர்கள் அங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முகக்கவசம், கையுறை உட்பட எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மண்டபங்களிலும், சமூக நலக்கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது கூட ஜெயலலிதா நினைவிட கட்டுமானப்பணியை விறுவிறுப்பாக தமிழக  அரசு மேற்கொண்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பணிகள் இரவு, பகல் பாராமல் விடிய விடிய நடந்து வருகிறது.

Related Stories: