பொன்மலை பணிமனைக்கு லோடு ஏற்றி வந்தவர்கள் உணவின்றி தவித்த டிரைவர்களுக்கு ரயில்வே ஊழியர்கள் உதவி

திருச்சி: திருச்சிபொன்மலை பணிமனைக்கு உதிரி பாகங்கள் ஏற்றி வந்த டிரைவர்கள் உணவின்றி தவித்தனர். அவர்களுக்கு உணவுப் பொருட்களை தென்னக ரயில்வே எம்பிளாய்ஸ் சங்கத்தினர் வழங்கினர். திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலைக்கு உதிரிபாகங்கள் வெளி மாநிலங்களான ராஜஸ்தான், ஆந்திரா, உத்திர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் கடந்த மார்ச் 21ம் தேதி பொன்மலை வந்தது. இந்நிலையில் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு துவங்கியதால் ரயில்வே பணிமனையில் உதிரிபாகங்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து உதிரி பாகங்கள் பொன்மலை ரயில்வே பணிமனை நுழைவாயிலில் 7 லாரிகளில் இறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லாரி டிரைவர்கள் கொண்டு வந்த சமையல் பொருட்களை வைத்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில் கேஸ், சமையல் பொருட்கள் அனைத்தும் காலியானதால் உணவின்றி தவித்து வந்தனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. குடிநீர் கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து கடந்த 3ம் தேதி தமிழ்முரசு நாளிதழில் படம் வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக தென்னக ரயில்வே எம்பிளாய்ஸ் சங்கம் சார்பில் அவர்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவு மற்றும் காய்கறிகள் பழங்கள் எண்ணெய் வகைகள் குடிநீர் உள்ளிட்டவைகளை சங்கத்தலைவர் பவுல் ரக்ஸ், உதவி தலைவர் பாலமுருகன் துணைச் செயலாளர்கள் ஞானசேகரன் ஜம்புகேஸ்வரர் கணேஷ்குமார் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர். பின்னர் மருத்துவ குழுவினர் டிரைவர்களுக்கு கொரானா உள்ளதா என தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதித்தனர்.

Related Stories: