குமரியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 5 ஆயிரம் மீனவர்கள் கரை திரும்புகின்றனர்: பரிசோதனைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா?

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம், மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு மீனவர்கள் சென்றுள்ளனர். இவர்களில்  6000 மீனவர்கள் கரை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு தொடங்கி நீண்ட நாட்களுக்கு பின்னர் தொழில் முடிந்து கரை திரும்புவதால் உடனுக்குடன் அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக  தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) குமரி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பிப்ரவரி மாதம் சுமார் 500 விசைப்படகுகளிலும், 100க்கும் மேற்பட்ட வள்ளங்களிலும் சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு சென்று இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கி பல கோடி ரூபாய் மதிப்புள்ள மீன்களுடன் ஏப்ரல் மாதம் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பெருநாளை கணக்கிட்டு ஊர் வந்து சேர்ந்து குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

 வழக்கம்போல் தொழில் முடிந்து சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள மீன்களுடன் 100 விசைப்படகுகளுடன் 1000 மீனவர்கள் வந்து சேர்ந்துள்ளனர். எஞ்சிய 5000 மீனவர்களும்  சுமார் 70 கோடி மதிப்பிலான மீன்களுடன் வந்து கொண்டு இருக்கின்றனர். இந்த மீனவர்கள், அரபிக்கடல் பரப்பில் பல வாரங்கள் தங்கி மீன்பிடி தொழில் செய்துள்ளார்கள். எனவே, அவர்கள் வந்திறங்கியவுடன் கொரோனா தொற்று  பரிசோதனை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: