மின்உபகரணங்களை இயக்கத்தில் வையுங்கள்; இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைப்பதால் அச்சப்பட தேவையில்லை...தமிழ்நாடு மின் வாரியம் வேண்டுகோள்

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072 ஆக அதிகரித்துள்ளது.  இதற்கிடையே, பிரதமர் மோடி ஏற்கனவே 2 முறை டிவி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த மாதம் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு பின்பற்ற வலியுறுத்தினார். அதற்கு 2 நாட்கள் கழித்து 24ம் தேதி 2வது முறை உரையாற்றும்  போது, 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வீடியோ ஒன்றை சமூக இணையதளத்தில் அவர் வெளியிட்டார்.

அதில், முடக்க காலத்தில் மக்கள் வீட்டுக்குள் இருந்து சமூக விலகல் என்ற லட்சுமண் ரேகையை தாண்டக் கூடாது. வீட்டில் மக்கள் தனிமையாக உணரலாம். ஆனால், நாட்டு மக்கள் 130 கோடி பேரின் ஒட்டு மொத்த பலமும், நம்  ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது என்பதை உணர வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இரவு 9 மணிக்கு  வீட்டின் அனைத்து மின்சார விளக்குகளையும் 9 நிமிடங்கள் அணைத்து விட்டு, வீட்டின் வாசல் அல்லது பால்கனியில்  நின்று மெழுகுவர்த்தி அல்லது விளக்கு அல்லது செல்போன் டார்ச் ஆகியவற்றை ஒளிரச் செய்ய வேண்டும். அவ்வாறு ஒளிரச் செய்யும்போது, ‘சூப்பர் பவர்’ பிரகாசம் ஏற்படும். அது, நாம் தனியாக இல்லை, அனைவரும் கொரானாவுக்கு எதிராக  ஒட்டு மொத்த தீர்மானத்துடன் போராடுகிறோம் என்பதை உணர்த்தும் என்றார்.

தமிழகத்தில் இன்று இரவு 9 மணி முதல் 9:09 மணி வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் என பொதுமக்களுக்கு நேற்று தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்தது. அனைத்து மின் ஊழியர்களும் தவறாமல் பணியில்  இருக்க வேண்டும். 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும். அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்னை ஏற்படும்.  என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைப்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மின்விளக்குகளை அணைக்கும் போது மின்கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பாடத வகையில்  தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்துள்ளது. மின்விளக்கை அணைக்கும்போது மற்ற மின்உபகரணங்களை வழக்கம்போல் இயக்கத்தில் வைத்துக்கொள்ளவும் அறிவுத்தியுள்ளது.  

இன்று இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்கும்போது தெருவிளக்குகளை நிறுத்தக்கூடாது. ஒவ்வொரு தெருவிலும் விளக்குகள் எரியும் என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்வது அவசியம் என்று அரசு தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள் உள்ளிட்ட் அத்தியாவசியமான இடங்களில் விளக்குகளை அணைக்கக்கூடாது. ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் அணைத்தால் மின்கட்டமைப்பு பழுதாகும் என்ற தகவலால் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: