கர்நாடகா மாநிலத்தில் இருந்து 150 கிமீ தூரம் நடந்தே பெரியகுளம் வந்த டிரைவர்: வீட்டில் தனிமைப்படுத்த உத்தரவு

பெரியகுளம்: கர்நாடகா மாநிலத்திலிருந்து 150 கிமீ தூரம் நடந்தே பெரியகுளத்திற்கு வந்த லாரி டிரைவரை வீட்டில் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு தவிர்க்க முடியாத காரணங்களான இறப்பு மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்களில் வரும் நபர்களை, தெர்மல் ஸ்கேன் முலம் சோதனை செய்யும் மருத்துவர்கள், பின்னர் கிருமிநாசினி தெளித்து அவர்களை அனுப்பி வைக்கின்றனர். நேற்று மாலை அவ்வழியாக நடந்து வந்த நபரை போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர் தேனி மாவட்டம், பெரியகுளம் நகரைச் சேர்ந்த 48 வயதானவர் என்பது தெரிந்தது.

அவர் கர்நாடக மாநிலத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்ததாக தெரிவித்தார். ஊரடங்கு உத்தரவு போட்டதால், அங்கிருந்து வெளியேற முடியாமல் கடந்த 10 நாட்களாக பெங்களுரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள டும்கூர் பகுதியிலிருந்து நடந்தே வந்துள்ளார். சில இடங்களில் தங்கியும், கிடைக்கும் வாகனங்களில் ஏறியும் வந்து தேனி மாவட்ட எல்லையான சோதனைச்சாவடிக்கு வந்ததாக தெரிவித்தார்.

போலீசார் அவரை சோதனை செய்தபோது அவருக்கு காய்ச்சல் இல்லாதது தெரிய வந்தது. அவரை பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிட்டு, அவரை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரியகுளத்தில் உள்ள கொரோனா கண்காணிப்பு சுகாதாரத்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

Related Stories: