கொரோனா தடுப்பு பணிக்கு எஸ்பிஐ ஊழியர்கள் 100 கோடி நிதி

சென்னை: நாட்டின் மிகப்பெரிய கடனுதவி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 2,56,000 ஊழியர்கள் தங்களது 2 நாள் சம்பள தொகையான ₹100 கோடியை, கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். மேலும், வங்கி நிர்வாகம் தனது சமூக பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாடுகளில் ஒரு பகுதியாக 2019-20 நிதியாண்டின் லாபத்தில் 0.25 சதவீதத்தை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ்குமார் கூறுகையில், ‘‘எஸ்பிஐ ஊழியர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து தங்களது 2 நாள் சம்பளத்தை கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமரின் (பி.எம் கேர்) நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. அரசு மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளிலும் எங்களது ஆதரவை தொடர்ந்து அளிப்போம். இந்த நெருக்கடியான நேரத்தில் எஸ்பிஐ நாட்டிலுள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வங்கி சேவையை வழங்க உறுதி பூண்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய மக்களுக்கு உதவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது,’’ என்றார்.

Related Stories: