தமிழகத்தில் ஊரடங்கிற்கு 95% மக்கள் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்; 5% பேர் தான் ஒத்துழைக்கவில்லை: வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வர கூடாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,122 பேரில் 411 பேர் டெல்லியில் உள்ளனர்; மீதமுள்ள 711 பேரில் 611 பேர் கண்டறியப்பட்டு வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மிதமுள்ளவர்களை கண்டறியும் பணி போர்க்கால அடைப்படையில் நடந்து வருகிறது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை, கிராம நிர்வாக அலுவலர்களை பயன்படுத்தி கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என கூறினார். மேலும் பேசிய அவர்; 144 தடை உத்தரவு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு குழுவின் மூலம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஊரடங்கிற்கு 95% மக்கள் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்; 5% பேர் தான் ஒத்துழைக்கவில்லை. தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், முகக்கவசம் வழங்க வேண்டும்.

மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் 32,000-க்கும் அதிகமான இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு நடத்த 957 வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 956 பேர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. அத்தியாவசிய பணியை தவிர வேறு நிறுவனங்கள் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

இதனை தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்; கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். தேவையில்லாமல் வெளியே வருபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் பேரிடர் குழுவினரும் ஈடுபடுவார்களா. அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முதியவர்களுக்கு ஓய்வூதியம் வீட்டிற்கே சென்றடையும் வகையில் நடவடிக்க்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

Related Stories: