கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு எதிரொலி 14 லட்சம் கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தொகுப்பு: ரூ.93 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணி நிறுத்தம், பஸ், ஆட்டோ, கார் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு சிறப்பு தொகுப்பு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையேற்று தமிழக அரசு சார்பில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு, பிற மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு தொகுப்பு வழங்க ₹93 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தொழிலாளர் நலத்துறை கூடுதல் செயலாளர் நசிமுதீன் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு நபருக்கும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படுகிறது.

அதன்படி பதிவு செய்த 12.13 லட்சம் கட்டிட தொழிலாளர்கள், மாநிலங்களுக்கு இடையே புலம் பெயர்ந்த 24,174 கட்டுமான தொழிலாளர்கள், 83,500 டிரைவர்கள், டிரைவர்கள் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெறும் 3 ஆயிரம் பேர் கட்டுமான நல வாரியத்தில் குடும்ப ஓய்வூதியம் பெறும் கட்டுமான தொழிலாளரகள் 83 ஆயிரம் பேர் என மொத்தம் 14 லட்சத்து 57 ஆயிரத்து 526 பேருக்கு இந்த சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: