டிவிட்டர் மூலம் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய உத்தவ் தாக்ரே, கே.டி.ராமாராவ் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: தன்னுடைய டிவிட்டர் பதிவின் மூலம் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே மற்றும் தெலங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் ஆகியோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  மகாராஷ்டிரா மாநிலத்தில் உணவும், இருப்பிடமும் இல்லாமல் சிக்கித் தவிக்கும் 120 வியாபாரிகளுக்கு உதவ வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் கங்கவதி பகுதிகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவ வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிற்கும், தெலங்கானா மாநிலத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவ வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் கே.சி.சந்திரசேகர் ராவுக்கும் தனது டிவிட்டர் பதிவின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Advertising
Advertising

இதனையடுத்து, தெலங்கானாவில் சிக்கித் தவித்தவர்களுக்கு தலா 12 கிலோ அரிசி மற்றும் தலா 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டதாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் செயல் தலைவரும் அம்மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழில், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் தனது டிவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்தார். அதேபோல், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முறையான உணவு மற்றும் இருப்பிட வசதிகள் அளிக்கப்பட்டு, அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தனது டிவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்தார். டிவிட்டர் மூலமாக வைக்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிய உத்தவ் தாக்ரே, கே.டி.ராமாராவ் ஆகியோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

முழு ஆதரவு

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அனைத்துக்கட்சி கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக  மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும். @CMOTamilNadu  இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: