கொரோனா அறிகுறி உள்ளதா என தமிழகம் முழுவதும் 3.96 லட்சம் பேரிடம் ஆய்வு : கொரோனா பரவிய 12 மாவட்டங்களில் சுகாதாரத்துறை நடவடிக்கை

சென்னை : தமிழகத்தில் சுமார் 4 லட்சம் பேரிடம் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு நடத்தப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 74 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 6 பேர் குணமடைந்து இருக்கிறார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இந்நிலையில் காய்ச்சல், சளி, சுவாசக் கோளாறு இருக்கிறதா என 12 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று 3 லட்சத்து 96 ஆயிரத்து 147 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்துடன் சுகாதாரக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.  

அதன்படி, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களை கொண்ட மாவட்டங்களில், அவர்கள் வசித்த வீட்டை சுற்றி 5 கிமீ தொலைவு வரை கொரோனா கட்டுப்படுத்தல் திட்டப்பகுதியாகவும் கூடுதலாக 2 கி.மீ. தொலைவு வரை இடைப்பட்டப் பகுதியாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் சென்று தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 7 கிலோ மீட்டருக்குள் உள்ள 1,08,677 வீடுகளில் 2271 கள பணியாளர்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும், சென்னை, மதுரை, நெல்லை, ஈரோடு, சேலம், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வீடுவீடாக சென்று 3 லட்சத்து 96 ஆயிரத்து 147 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டு இருப்பதாவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: