ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா: பாதித்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்வு

சென்னை: 15 வயது சிறுமி உள்ளிட்ட 17 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து பாதித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 67 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்த 45 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 3,018 வென்டிலேட்டர்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 361 பேர் இந்த வார்டுகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Advertising
Advertising

வெளிநாடு சென்று வந்த அறிகுறி தென்பட்ட 2,040 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 1,853 பேருக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் குணமடைந்து வீடு களுக்கு திரும்பியுள்ளனர். 119 பேர் ரத்த மாதிரிகள் பரிசோதனையில் உள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 67 பேரில் நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட தாய்லாந்தை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பெருந்துரை ஐஆர்டி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அமெரிக்காவில் இருந்து வந்து கொரோனா பாதிக்கப்பட்ட மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் குடும்பத்தினருக்கு வைரஸ் பரவி உள்ளது. இதன்படி 52 வயது பெண், 76 வயது பெண், 20 வயது பெண், 20 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த மதுரைச் சேர்ந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த 25 வயது ஆண், டெல்லியில் இருந்து சென்னை வந்த குளித்தலையைச் சேர்ந்த 42 வயது ஆண், சென்னை பிரோட்வேயை சேர்ந்த 50 வயது ஆண் உள்ளிட்ட 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: