சித்தா, யுனானி, ஆயுர்வேத மருந்துகளால் கொரோனாவை குணப்படுத்த முடியுமா? ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கொரோனாவை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு 33 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், 1050 பேர் இந்நோயின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர். இந்நோயை குணப்படுத்த இதுவரை மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்காத நிலையில், சித்த மருத்துவத்தில் இந்நோயை குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்ய இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ரசசெந்துரம், அரிதாரம்,  கேஷ்டம் உள்ளிட்ட ஒன்பது வகை மூலிகைகளை சேர்த்து மருந்தாக சிறிது அருந்தினாலே, அனைத்து வகையான வைரஸ்களும் அழிக்கப்பட்டு விடும். சித்த மருத்துவ முறையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியுமா என்று பரிசோதிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு மனுக்கள் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. எனவே, சித்த மருத்துவத்தை கொரோனா வைரஸ் நோய்க்கு பயன்படுத்துமாறும், இதுதொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

 இதேபோல், செந்தமிழ் செல்வன் என்பவரும் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், சித்தா, யுனானி, ஆயுர்வேத மருந்துகள் கொரோனா வைரசை கட்டுப்படுத்தவும், அந்த வைரஸ் பாதித்தவர்களை குணமாக்கவும் பயன்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக வாட்ஸ்அப் வலைதளம் மூலம் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா நோய்க்கு சித்தா, யுனானி, ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: