கொரோனாவால் விலை போகாத வாழைத்தார் விவசாயி விஷம் குடித்து தற்கொலை: திருச்சி அருகே பரிதாபம்

திருச்சி: வறட்சி, இயற்கை பேரழிவை தொடர்ந்து கொரோனாவால் வாழைத்தார் விலை போகாததால் திருச்சியில் வாழை விவசாயி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் குழுமணியை சேர்ந்தவர் பெரியசாமி (67). இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். விவசாயியான பெரியசாமி, தனக்கு சொந்தமான ஒரு ஏக்கரில் ஏலரசி வாழையும், குத்தகைக்கு பிடித்த ஒரு ஏக்கரில் நேந்திரன் வாழையும் சாகுபடி செய்துள்ளார். இதில் சொந்த நிலத்தில் சாகுபடி செய்துள்ள வாழை பூவும், பிஞ்சுமாக உள்ளது. குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நேந்திரன் வாழை நன்கு விளைந்திருந்தது. கொரோனா ரைவஸ் காரணமாக 144 தடை உத்தரவால் ₹300க்கு விலை போகக்கூடிய வாழைத்தார் ₹150க்குதான் போனது. மீதம் உள்ள வாழைத்தார்கள் பழுத்து வருவதால் விற்பனைக்காக வியாபாரிகளை அணுகும்போது கொரோனா வைரஸ் காரணத்தை காட்டி வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் தவிர்த்து வருகின்றனர்.

மிக குறைந்த விலைக்கு வாழைத்தார் விற்றதாலும், மீதி உள்ள வாழைத்தார்களை வியாபாரிகள் வாங்க முன்வராததால் பெரியசாமிக்கு நஷ்டம் ஏற்பட்டது. வாழை சாகுபடிக்கு வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்றும், வாழையிலேயே பழம் பழுத்து வீணாகுவதால் மனம் உடைந்த பெரியசாமி தினமும் குடும்பத்தினரிடம் புலம்பியதோடு கடந்த 24ம் தேதி வீட்டில் விஷம் குடித்தார். அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெரியசாமி பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: