ஒருவருக்கு வந்தால் குடும்பமே பாதிக்கும் என்பதை உணராமல் இறைச்சி, காய்கறி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: ஊரடங்கு உத்தரவு காற்றில் பறந்தது

சென்னை: கொரோனா வைரஸ்  ஒருவருக்கு தொற்றினால் குடும்பமே பாதிக்கும் என்பதை உணராமல்,  இறைச்சி, மீன், காய்கறிகளை வாங்க நேற்று தமிழகம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் வந்ததால் வியாபாரிகள் திண்டாடி போனார்கள். ஊரடங்கு உத்தரவு காற்றில் பறந்தது.  இந்தியா முழுவதும் கொரோனா ேநாய் தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் பல நூறு பேர் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய் தொற்று பரவலை தடுக்கவே 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

Advertising
Advertising

ஆனால் தமிழகம் முழுவதும் நேற்று இறைச்சி, மீன், காய்கறிக் கடைகளுக்கு மக்கள் படையெடுத்தனர். பிற்பகல் 2.30 மணியுடன் கடைகள் மூடப்படும் என்பதால் பலர் கூடிவிட்டனர். இதனால் கடைக்காரர்களும் மட்டன், சிக்கன், மீன் விலையை திடீரென உயர்த்திவிட்டனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. பல நூறு மக்கள் ஒரே இடத்தில் கூடினர். வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கூறியும் மக்கள் மட்டன், சிக்கன், மீன்களை வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கிலோ ரூ.800க்கு விற்கப்பட்ட ஆட்டு இறைச்சி ரூ.1200 வரை விற்கப்பட்டது. சில இடங்களில் ரூ.1400 கொடுத்து வாங்க ஆட்கள் இருந்தும் இறைச்சிக்கு டிமாண்ட் ஏற்பட்டது.

இதற்கு முக்கிய காரணமாக வியாபாரிகள் சொல்வது, வழக்கமாக தெலங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவில் ஆடுகள் வரும். 144 தடை உத்தரவால் வரத்து குறைந்துள்ளது. இது தான் விலையேற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல், சிக்கன் விலை ரூ.100லிருந்து ரூ.200க்கு விற்கப்பட்டது.

 

கோயம்பேடு மார்க்கெட்: கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாலை முதலே சிறுவியாரிகள், பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட் நோக்கி அலை அலையாக வரத் தொடங்கினர். காரணம் நேற்று முதல் மதியம் 2.30 மணிக்கு மேல் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. எங்கே தங்களுக்கு காய்கறி கிடைக்காமல் போய்விடுமோ அல்லது விலை உயர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் சிறுவியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு காய்கறிகளை வாங்கினர்.

ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும் சண்டையிட்டு கொண்டு காய்கறிகளை போட்டி போட்டு வாங்கினர். இவர்கள் யாரும் காய்கறிகளை வாங்கி குவிப்பதில் காட்டிய ஆர்வத்தை கொரோனா பரவலை தடுக்க அரசு பிறப்பித்த எந்த உத்தரவையும் கடைபிடிக்கவில்லை. ஒரு சில கடைகளில் 2 அடி தள்ளி நின்று மக்கள் காய்கறிகளை வாங்கினர். ஆனால் பெரும்பாலான கடைகளில் மக்கள் கூட்டம் கூடியதால் கோயம்பேடு மார்க்கெட் திணறியது. தகவலறிந்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி மக்கள் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்து நெரிசலை ஒழுங்குபடுத்தினர்.

Related Stories: