உணவின்றி தவிக்கும் நாய், கால்நடைகளுக்கு உணவு அளிக்க சிறப்பு ஏற்பாடு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பு: முதல்வர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம்  மற்றும்  மீன்வளத்துறை முதன்மை செயலாளர் “கால்நடை, கோழி, மீன், முட்டை, இறைச்சி  கால்நடை மற்றும் கோழித்தீவனம், கால்நடை தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றின்  நகர்வுகளை அனுமதிக்க அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களையும்  அறிவுறுத்தியுள்ளார்.

Advertising
Advertising

மேலும் வீதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நாயினங்கள் மற்றும் கால்நடைகள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் ஆகியவற்றுக்கு  விலங்கின ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள்  மூலமாக உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதை  உறுதி செய்யவும், செல்ல பிராணிகள் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள செல்ல பிராணிகளுக்கு உணவு வழங்கவும் ஏதுவாக தகுந்த அறிவுரைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

உணவின்றி சிரமப்படும் நாயினங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றிற்கு உணவு அளிக்கவும், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படும்  ஆதரவற்ற கால்நடைகள் மற்றும் பிராணிகள் நலன் பேணுதல் குறித்த தகவல்களை உடனுக்குடன் கவனிக்க  கால்நடை பராமரிப்புத் துறையால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

இதற்கென  பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-5880 மற்றும் 1962 ஆகியவை மூலமும், anh.tn@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும்  இதுகுறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: