கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள சித்த மருத்துவத்தில் வழிகள் உள்ளதா?

சென்னை: கொரோனா  வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள சித்த மருத்துவத்தில் வழிகள் உள்ளதா என்பது பற்றி சித்த மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வர், மூத்த சித்த மருத்துவ அறிஞர், பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் விளக்குகிறார்.

* கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள சித்த மருத்துவத்தில் வழிகள் உள்ளதா?

கொரோனா வில்லனை எதிர்த்து அனைவரும் போர்க்களத்தில் நின்று கொண்டு இருக்கிறோம். நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பட்டிமன்றம் நடத்துவதற்கு இது நேரம் இல்லை. சிக்கலான சூழ்நிலையில் எதை செய்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கலாம் என்ற பொது நோக்கத்தை உருவாக்கிக் கொண்டு நோயில் இருந்து மீட்கும் பணியில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

எப்படி உலக நலவாழ்வு மையம், யுனிசெப் அறிவுரை வழங்கியிருக்கிறதோ, அதேபோல் ஆயுஷ் அமைச்சகம் அறிவுரைகள் வழங்கி உள்ளது. அதில் சித்த மருத்துவம் மூன்றை பரிந்துரை செய்துள்ளது. அதில் ஒன்று நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதொடை மணப்பாகு. அதில் ஆடாதொடை மணப்பாகு, நிலவேம்பு குடிநீர் பற்றி மக்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள். இப்போது புதிதாக சிறந்த ஆற்றல் படைத்த கபசுர குடிநீரை  ஆயுஷ்துறை அறிமுகப்படுத்தியிருக்கிறது. நிலவேம்பு பற்றி மக்கள் நன்றாக அறிந்து அதை அனைவரும் வீட்டிலே வைத்திருக்கின்றனர். நவீன மருத்துவம் சோதனை அடிப்படையில் அமைந்தது என்றால் சித்த மருத்துவம் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு அமைந்தது.  

* சித்த மருத்துவ முறைப்படி வீட்டிலேயே கிருமிநாசினி தயாரிக்க முடியுமா?

வேப்பிலையை 2 கைப்பிடி அளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு அதில் 4 லிட்டர் தண்ணீர் விட்டு அதில் ஒரு டீ ஸ்பூன் மஞ்சள்தூளை போட்டு 10 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி பாத்திரத்தில் வைத்துக் கொண்டு அதை கைகழுவும் கிருமி நாசினியாக பயன்படுத்தலாம். மேலும் வீட்டில் மாலை நேரத்தில் சாம்பிராணி புகைப்போடுவது நல்லது, சாம்பிராணி புகை ஒத்துக்கொள்ளாதவர்கள் தவிர்க்க வேண்டும்.

* 21 நாள் வீட்டில் இருக்கும்போது செய்ய வேண்டியது என்ன?

வீட்டில் இருக்கும் போது சூடான தண்ணீரை குடிக்க வேண்டும், உணவுகளை தேவையான போது தயாரித்து சூடாகதான் சாப்பிட வேண்டும், பிரிட்ஜில் வைத்த உணவு, குளிர்ந்த நீரை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டில் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்ப்பது நல்லது, வீட்டில் உறவினர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும்.

* நோய்தொற்று வராமல் தவிர்க்க எந்த வகையான உணவுகள் உட்கொள்ள வேண்டும்?

இந்த மாதிரியான நேரத்தில் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளையும், சுத்தமான பழங்களை நன்றாக கழுவியும் சாப்பிட வேண்டும், சிறிது அழுகிய நிலையில் இருந்தால் அந்த பழங்களை தவிர்த்து விட வேண்டும். கஞ்சி வகைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரியவர்கள் தினம் 2 அவித்த முட்டையில் மிளகு, சீரகம், மஞ்சள் பொடியை தூவி சாப்பிட வேண்டும்.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினம் காலையில் எழுந்தவுடன் கால் தேக்கரண்டி திரிபலா சூரணத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் பத்மாசனத்தில் உட்கார்ந்து 5 நிமிடம் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். அப்படி மூச்சு பயிற்சி செய்யும் போது மூக்கில் மிளகளவு விக்ஸ் அல்லது மென்தாள் சேர்ந்த ஏதாவது ஒரு ஆயின்மென்ட் தடவிக்ெகாள்ள வேண்டும். அப்படி செய்வது நுரையீரலை வெதுவெதுப்படையச் செய்யும். இது மிகச்சிறந்த பயிற்சியாக அமையும். தினமும் காலை 5 நிமிடம், மாலையில் 5 நிமிடம் செய்ய வேண்டும். காலையில் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு எலுமிச்சைப் பழத்தை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து 2 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

நிலவேம்பு குடிநீர் தினம் ஒரு வேளை குடிக்க வேண்டும். மூக்கில் நீர்வடிதல், தொண்டை கரகரப்பு, இருமல் ஏற்படுகிறது என்றால் கபசுரநீர் குடிக்க வேண்டும். மேலும் கபசுரகுடிநீர் 2 வாரத்திற்கு குடிப்பதால் எந்தவிதமான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை. அவை அனைத்தும் காயகற்பம் மூலிகையினால் ஆனது என்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும். அதனால் கொரோனா வைரஸ் ஏற்பட்டால் கூட அதை நாம் எளிதில் சமாளிக்க கூடிய நோய் எதிர்ப்பு ஆற்றலை ஏற்படுத்தும்.

* கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க என்ன செய்யலாம்?

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுப்பதற்கு தான் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது. இது விலங்குகளில் இருந்து பரவக்கூடிய வைரஸ் இல்லை, மனிதர்களிடம் இருந்து பரவக்கூடியது. இந்திய அரசு தற்போது சமாளிக்கக் கூடிய  நிலவரம் சிறப்பானது தான். உலகத்திற்கு இது எடுத்துக்காட்டாக இருக்கும். சீனா தற்போது இந்த வைரஸ் நோயில் இருந்து மீண்டு வந்ததற்கு முக்கிய காணரம் சீன நாட்டு மருந்துகளையும், மேற்கத்திய நாட்டு மருந்துகளையும் இணைந்து மக்களுக்கு வழங்கியதுதான், எனவே நம்முடைய மருத்துவர்கள் நீயா, நானா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருக்காமல் நோய்களின் தேவைக்கு ஏற்ப நவீன மருத்துவத்தையும், மரபு வழி மருத்துவத்தையும் கலந்து பயன்படுத்துவது நல்லது.  இவ்வாறு மூத்த சித்த மருத்துவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறினார்.

Related Stories: