மாஸ்க்கை 10க்கு விற்க மத்திய அரசு உத்தரவு: 18க்கு விற்கிறது தமிழக அரசு

சென்னை: மருத்துவமனைகளில்  பயன்படுத்தப்படும் 3 அடுக்கு முகமூடிகளை (சர்ஜிகல் மாஸ்க்) மத்திய அரசு  10 ரூபாய்க்கு விற்க உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக அரசு தனது  பணியாளர்களுக்கே 18 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருக்கிறது. தமிழகம்  முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள்,  முகமூடிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்க  தமிழக அரசு நிதி  ஒதுக்கும். அந்த நிதியை கொண்ட சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மாவட்ட வாரியாக  உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் (டிஎன்எம்எஸ்சி) கிளைகளில்  தேவைப்படும் மருந்து, மாத்திரைகளை, மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.

அதற்கான ரசீதுகளும் வழங்கப்படும். அவற்றை மருத்துவ நிர்வாகங்களின் சார்பில் கணக்கு காட்டும்போது சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் ரசீதில் இருக்கும் விலையை விட அதிக விலைக்கு டிஎன்எம்எஸ்சி முகமூடிகளை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  கொரோனா  பீதியில் எல்லோரும் அச்சத்தில் இருக்கும் நிலையில்,  டிஎன்எம்எஸ்சி முடிந்த  வரை கொள்ளை அடிக்கும் தீவிரத்தில் உள்ளது. ஆம் மருத்துவமனைகளுக்கு தேவையான 3  அடுக்கு முகமூடி ஒன்றின் விலை 18 ரூபாயாக டிஎன்எம்எஸ்சி நிர்ணயம்  செய்துள்ளது. ஆனால் ரசீதில் 10 ரூபாய் என்றுதான்  குறிப்பிடுகிறார்களாம். அதனால் மருத்துவமனை நிர்வாகங்களின் பொறுப்பில்  இருப்பவர்கள்  தங்கள் காசை செலவிட வேண்டிய நிலைமை உள்ளது.

அதுமட்டுமல்ல  கொரோனா தொற்று அச்சத்தில் மருத்துவ பணியாளர்கள் அடிக்கடி முகமூடிகளை  மாற்றுகின்றனர். அதனால் முகமூடிகள் தீர்ந்து விடுவதால்   மருத்துவ பணியாளர்கள் சொந்தமாக முகமூடிகளை வாங்குகின்றனர். அதையும் தலா 18  ரூபாய்க்கு விற்கிறது டிஎன்எம்எஸ்சி. கொரோனா பீதி அதிகரித்ததும் மருந்துக்  கடைகள் ஒரு 3அடுக்கு முகமூடியை 25 முதல் 50 ரூபாய்க்கு விற்று கொள்ளை  அடித்துக் கொண்டு இருக்கின்றன.   அதே வேலையை அதுவும் இக்கட்டான  நேரத்தில் தமிழக அரசு நிறுவனமும் செய்வது அநியாயம் என்கிறார்கள் மருத்துவ  பணியாளர்கள். இத்தனைக்கும் ‘3 அடுக்கு முகமூடியை அதிகபட்சமாக  10ரூபாய்க்குதான் விற்க வேண்டும்’ என்று மத்திய அரசின் உணவு வழங்கல்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த  உத்தரவை தமிழக அரசு நிறுவனமே கண்டுக் கொள்ளவில்லை.

Related Stories: