கொரோனாவை எதிர்கொள்ள கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராட வேண்டும்: அனைத்துக் கட்சிகூட்டம் நடத்துக....மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: பேரிடரை போர்க்கால அடிப்படையில் சந்திக்க ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராடவும், ஜனநாயக முறையில் எதிர்கொள்ள தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் மூலம் உலகளவில் 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,057 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் காரணமாக 19 உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பரவுதலை தடுக்க, அடுத்த மாதம் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது.  

Advertising
Advertising

தொழில்துறைகள், நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன. அன்றாட கூலி வேலை செய்பவர்கள் நிலை மிகவும் பரிதாபமாகி விட்டது. தொழிலாளர்கள்  வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது; கொரோனா எனும் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பதில் மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா குறித்துப் பரப்பப்படும் தகவல்கள் மக்களை மனரீதியில் பாதித்துப் பதற்றமடைய வைத்திருக்கிறது.

இன்னும் எத்தனை நாளைக்கு முறையான வருமானமும் இல்லாமல்; செய்யும் தொழிலையும் இழந்து இன்னலுக்கு ஆளாகி அவதிப்படுவோம் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான இந்தப் பணியில் ஆளுங்கட்சி மட்டுமின்றி, அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஈடுபடுவதுதான் சிறப்பாக இருக்கும். வெகுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய இந்தப் பேரிடரை ஆளுங்கட்சி மட்டும் தனித்து நின்று துடைத்துவிட முடியாது. அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டிய தருணம் இது. ஆகவே, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories: