இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக குறையும்: மூடீஸ் நிறுவனம் கணிப்பு

டெல்லி: இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாகத்தான் இருக்கும் என மூடீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 கொரோனா பாதிப்பால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி கடும் பாதிப்பை அடையும் என பல்வேறு நிதி அமைப்புகள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இங்கிலாந்தை சேர்ந்த பார்க்லேய்ஸ் நிறுவனம், வரும் 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறியீடான ஜிடிபி ஏற்கெனவே கணித்திருந்ததை விட 1.7 சதவீதம் குறைந்து 3.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. இதுபோல், மூடீஸ் நிறுவனமும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், இந்த நிறுவனம் நடப்பு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 2020ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 2.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த நிறுவனம் வெளியிட்ட கணிப்பில் 5.3 சதவீதமாக இருக்கும் என கூறியிருந்தது. 2019ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக கணித்திருந்தது.  இத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வளர்ச்சி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
Advertising
Advertising

 கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்களின் வருவாய் குறைந்துள்ளது. வங்கிகள் கடன் வழங்கல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பொருளாதார வளர்ச்சியில் மேலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அடுத்த ஆண்டில் இந்த நிலையில் இருந்து மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அப்போது  ஜிடிபி 5.8 சதவீதமாக உயரலாம். உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 0.5 சதவீதம் குறையலாம். கொரோனா  வைரஸ் பாதிப்பால், சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்புகள்  ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களிடையே வாங்கும் சக்தி மற்றும் தேவை உயரும்  என்பதை இன்னும் 4 மாதங்களுக்கு எதிர்பார்க்க முடியாது. சில  மாதங்களுக்கு வேலையிழப்பு தொடரும். தொழில்துறைகளுக்கு  அரசு ஆதரவு அளித்தாலும், சிறு நிறுவனங்களுக்கு பாதிப்பு மிக மோசமானதாகவே  இருக்கும். சீனாவின் ஜிபிடி நடப்பு ஆண்டில் 3.3  சதவீதமாகவும் அடுத்த 2021 ஆண்டில் 6 சதவீதமாகவும் இருக்கும் என மூடீஸ்  தெரிவித்துள்ளது.

Related Stories: