அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கொண்டு செல்ல போலீஸ் கமிஷனருடன் ஆலோசனை: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: பால், நாளிதழ், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு கொண்டு செல்வதில் எந்த தடையும் ஏற்படாமல் இருக்க போலீஸ்  கமிஷனரிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.  சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் ட்ரோன் மூலம்  கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடக்கிறது. 144 தடைக்கு பின் பெரும்பாலான இடங்களில் கூட்டம்  குறைந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலை சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் 42 கிலோ எடை  கொண்டுள்ள ட்ரோன் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இது, ஒரு நாளைக்கு 25 முதல் 40 ஏக்கர் வரையிலும் 8 நிமிடத்தில் 1 கி.மீ வரையிலும் மருந்து தெளிக்கும் திறன் கொண்டது. பெட்ரோலில் இயங்க  கூடிய இந்த கருவி, தொடர்ந்து 1.30 மணி நேரம் இயங்கும். அதேபோல் 16 லிட்டர் கிருமி நாசினியுடன் 3.5 லிட்டர் பெட்ரோல் உடன் 100 மீட்டர் வரை  பறக்கும் சக்தி கொண்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட இந்த ட்ரோன்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள  சந்தைகள், குடிசை மாற்றுவாரிய பகுதிகள் வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் மருந்துகள் அடிக்கப்படும். அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள 4  இயந்திரங்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு 2 லட்சம் சதுரடி வரை கிருமிநாசினி தெளிக்கப்படும்.

சென்னையில் 22 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.  வெளிமாநிலத்தை சார்ந்த 2000 பேர் முகாம்களில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறிகள் காரணமாக அவரவர் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்களை தொலைபேசி வாயிலாக  விசாரிக்கப்படுகிறது. இதற்கான பணியில் 30 மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கட்டுப்பாட்டு அறையில் மக்களின் சந்தேகம் ேபாக்க 10  மருத்துவர்கள் பணியில் உள்ளனர். மளிகை பொருட்களை வீட்டில் டெலிவரி செய்ய தடை இல்லை. சமைக்கப்பட்ட உணவுகள் ஆன்லைனில்  விற்பனை செய்ய முழுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பால், நாளிதழ், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பல இடங்களுக்கு கொண்டு  செல்வதில் எந்த தடையும் ஏற்படாமல் இருக்க சென்னை மாநகராட்சி சார்பில் போலீஸ் கமிஷனரிடம் பேசியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: