144 தடை உத்தரவை மீறி சென்னையில் பைக், கார், ஆட்டோக்கள் தடையின்றி ஓடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

* உத்தரவை மீறி சுற்றியதாக 53 வழக்குகள் பதிவு

* போலீஸ் கமிஷனர் உத்தரவை காற்றில் பறக்கவிடும் போலீசார்
Advertising
Advertising

சென்னை: சென்னையில் 144 தடை உத்தரவை மீறி பைக், கார், ஆட்டோக்களில் மக்கள் தடையின்றி சுற்றி வருவதால் கொரோனா தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாநகரம் முழுவதும் தடையை மீறி சுற்றியதாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உட்பட மாநிலம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக எல்லைகளை மூடி போலீசார் சீல் வைத்துள்ளனர். 5 பேருக்கு மேல் யாரும் ஒன்று கூடக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

அதனால் சென்னையில் உள்ள மக்கள் அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவை யாரும் சரியாக கடைப்பிடிக்காமல் வழக்கம் போல் அனைவரும் சர்வசாதாரணமாக பைக், கார் மற்றும் ஆட்டோக்களில் சுற்றி வருகின்றனர். போலீசார் சென்னை மாநகரம் முழுவதும் 147 இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் மக்கள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி போலீசாரிடம் இருந்து தப்பி விடுகின்றனர். கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் எந்த வித அச்சமின்றி மக்கள் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கார் வைத்துள்ளவர்கள் மருத்துவ அவசரம் என்று கார் கண்ணாடியில் எழுதி ஒட்டியபடி சுற்றுகின்றனர். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ்காந்தி சாலை, திருவிக மேம்பாலம் அருகே, அண்ணாசாலை, புரசைவாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வடபழனி நூறடி சாலை என முக்கிய சாலைகளில் மட்டும் போலீசார் வாகனங்களில் வருபவர்களிடம் அடையாள அட்டையை கேட்டு தீவிர சோதனைக்கு பிறகு அனுப்பி வைக்கின்றனர். அடிக்கடி வாகனங்களில் சுற்றி வரும் நபர்களை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்புகின்றனர்.

ஆனால் சென்னையில் புறநகர் பகுதிகளில் எந்த இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இதனால் மக்கள் சர்வ சாதாரணமாக வழக்கமான நாட்கள் போல் சுற்றி வருகின்றனர். ஒவ்வொரு பைக்குகளில் வாலிபர்கள் மூன்று பேராக சுற்றி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்று மட்டும் போலீசார் ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு அறிவுரை வழங்கி வீட்டிற்குள் இருக்கும்படி கூறினர். ஆனால் போலீசார் தற்போது கொரோனா அச்சத்தில் அவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்தபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதாக கூறுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பித்தும் அதை முறையாக நடைமுறைப்படுத்தாமல் சில இடங்களை தவிர்த்து போலீசார் பணியில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.

பெயருக்கு மட்டும் சில இடங்களில் போலீசாரே தங்களது செல்போனில் வாகன சோதனையில் முறையாக ஈடுபடுவது போல் வீடியோ எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வருகின்றனர். பல இடங்களில் உயர் அதிகாரிகள் மேல் உள்ள கோபத்தில் அரசு அனுமதி அளித்த நபர்களை கூட சரியாக விசாரிக்காமல் அவர்களை முதலில் லத்தியால் கடுமையாக தாக்கிவிட்டு பிறகு தான் எங்கு இருந்து வருகிறீர்கள் என்று கேட்கின்றனர்.

நேற்று சென்ைனயில் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர் ஒருவர் பைக்கில் பணிக்கு செல்லும் போது உதவி ஆய்வாளர் ஒருவர் தான் சரியாக பணியில் ஈடுபடுவது போல் வீடியோ எடுக்கசொல்லி மருத்துவரை தாக்கும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி 144 தடை உத்தரவை மீறி வரும் வாகன ஓட்டிகளிடம் முறையாக விசாரணை நடத்தி அதன்பிறகு அவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் போலீசார் எச்சரிக்கையை மீறி 144 தடை உத்தரவை மதிக்காமல் சுற்றி வந்த லாயிட்ஸ் சாலை ரோடிரிபுரத்தை சேர்ந்த ரமேஷ்குமார்(34), பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை சந்திப்பில் சுற்றி வந்த புரசைவாக்கம் ஆர்.கே.புரத்தை சேர்ந்த பாலாஜி(23), வேலூர் மாவட்டம் காட்பாடி ராமபுரம் போஸ்ட் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ேடனியல்(30) மற்றும் மயிலாப்பூர் பஜார் பகுதியில் சுற்றி வந்த ஆர்.ஏ.புரம்  ேகசவபுரம் 3வது தெருவை சேர்ந்த ஐப்பன்(21), மயிலாப்பூர் ரோசரி சர்ச் சாலையை ேசர்ந்த சூர்யா(25) ஆகிய 5 பேரை போலீசார் ஐபிசி 188, 269 பிரிவுகளின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.

அதேபோல், இன்று காலை வரை தடையை மீறி சுற்றியதாக சூளைமேடு காவல்நிலையத்தில் 2 வழக்குகளும், ஏழுகிணறு, கோயம்பேடு, திருமங்கலம், முத்தியால்பேட்டை காவல் நிலையங்கள் என மாநகரம் முழுவதும் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 8 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 194 பேர் மீதும், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 47 நபர்கள் மீதும் என மொத்தம் மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று இரவு வரை 249 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: