கொரோனா தொடர்பாக அவசர முடிவுகளை எடுக்காமல் ஸ்டான்லி மருத்துவமனை டாக்டரை அவசரமாக தூத்துக்குடிக்கு மாற்றிய மர்மம் என்ன?: நோய் தடுப்பு பணிக்கு திமுக எம்பி, எம்எல்ஏக்கள் நிதி ஒதுக்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கொரோனா தொடர்பான அவசர முடிவுகளை எடுக்காமல் ஸ்டான்லி மருத்துவமனை டாக்டரை அவசரமாக தூத்துக்குடிக்கு மாற்றிய மர்மம் என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா நோய்த்தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்பிக்களும், எம்எல்ஏக்கள் அனைவரும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய அந்தந்த மாவட்ட கலெடர்களுடன் உடனே கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டுக் கொள்கிறேன். குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது. தற்போது அனைவருக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது, ஊரடங்கு உத்தரவால்  ஏற்பட்டுள்ள வருமான இழப்பு. அதை ஈடுகட்டுவதற்கான  முயற்சிகளில் இந்த அரசு உடனே ஈடுபட வேண்டும்.ஆகவே முதலில் ஓட்டுநர்கள் (ஆட்டோ, ஓலா, ஊபர் டாக்சி உள்ளிட்ட) அனைரும் வாங்கியிருக்கும் வாகன கடன்களுக்கான மாதாந்திர தவணைப் பணம் வசூலை வங்கிகள் 3 மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வங்கி அதிகாரிகளை அழைத்துப் பேசி அறிவுறுத்த வேண்டும்.

 குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் வாங்கிய கடன்கள் மீதான எவ்வித வசூலும் மூன்று மாதங்களுக்கு மேற்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிற்கும் உடனடியாக 3 லட்சம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கிட வேண்டும். மேலும், 10, 11ம் வகுப்புத் தேர்வுகள் எழுதியவர்கள் குறித்தும் முடிவு எடுக்கவில்லை. கொரோனா அச்சத்தின் உச்சத்தில் நடத்தப்பட்ட 12ம் வகுப்புத் தேர்வை 34 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. ஆகவே, இந்த இரண்டு விஷயங்களிலும் - பதற்றத்தில் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கும், கவலையில் உள்ள பெற்றோர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக நல்ல முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்புக்கு இப்போது ஒதுக்கப்பட்டுள்ள 3,280 கோடி ரூபாய் நிதியுதவி போதாது என்பதால் மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றாவது இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில் கைதானவர்களையும் விடுவிக்க வேண்டும்

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு:  உமர் அப்துல்லாவை விடுவித்து மெகபூபா முப்தி உள்ளிட்ட பிற காஷ்மீர் தலைவர்களை விடுவிப்பதில்லை என்ற முடிவானது மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒருங்கே தரும் முடிவாகும். கொரோனா வைரசைத் தடுக்க நாம் ஆயத்தமாகுதல் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு பரோல் வழங்கி வரும் நிலையில், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளார்.

Related Stories:

>