கொரோனா பாதிப்பு எதிரொலி: மருத்துவ உபகரணங்கள் வாங்க தொழிலாளர்களுக்கு வழங்க நிதி: எம்பி, எம்எல்ஏக்கள் அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் அதன் பாதிப்பையும் கருத்தில் கொண்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க தமிழக எம்பிக்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை அரசுக்கு நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி அறிவிப்பு:‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  மக்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூபாய் 1 கோடி வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தமிழக சட்டமன்றத்தில் உள்ள 7 காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கணிசமான தொகையினை வழங்குவார்கள்’ எனத்தெரிவித்துள்ளார்.

பாமக இளைஞர் அணி  தலைவர் அன்புமணி : கொரோனா நோயை கட்டுப்படுத்தத் தேவைப்படும் பிற  கருவிகளை வாங்க தமிழ்நாடு அரசுக்கு பெருந்தொகை தேவைப்படுகிறது.  தமிழக  அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை  வாங்குவதற்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து  முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன்.

விசிக தலைவர் திருமாவளவன்: அமைப்புசாரா  தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஒரு மாத ஊதியத்தை தமிழக முதலமைச்சர்  நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது.  மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக  முதல்கட்டமாக தலா ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திருச்சி எம்பிதிருநாவுக்கரசர்:  மருத்துவ உபகரணங்கள் வாங்க ஒரு  சட்டமன்ற தொகுதிக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் திருச்சி மாவட்ட ஆட்சித்  தலைவருக்கு திருச்சி கிழக்கு-மேற்கு, திருவெறும்பூர், திருவரங்கம் ஆகிய  நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் ரூ.40 லட்சமும், புதுக்கோட்டை,  கந்தர்வக்கோட்டை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ரூ.10 லட்சம்  வீதம் மொத்தம் ரூ.20 லட்சமும் ஆக மொத்தம் ரூ.60 லட்சம் திருச்சி,  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு எனது நாடாளுமன்ற உள்ளூர் தொகுதி  மேம்பாட்டு நிதியில் இருந்து முதல்கட்டமாக வழங்கப்படுகிறது. அதிமுக எம்பி ராவீந்திரநாத்: கொரோனா தடுப்பு பணிகளுக்காக தேனி நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து ரூ.1 கோடியை ஒதுக்கி உள்ளேன்.

Related Stories:

>