சேலத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : சென்னையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி, இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பேருக்கு பாதிப்பு

சென்னை : தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. இதனிடையே நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக ட்விட் செய்துள்ளார்.

அதில், தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 5 பேரில் 4 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மீதமுள்ள ஒருவர் சென்னையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஆவார். 5 பேரும் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, எனத் தெரிவித்துள்ளார்.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்

கடந்த 28ம் தேதி ஓமனில் இருந்து சென்னை வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 45வயது இளைஞர்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரண்டாவதாக டெல்லியில்  இருந்து ரயில் மூலம் சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கும், நியூசிலாந்தில் இருந்து சென்னை வந்த 65 வயதுடைய முதியவருக்கும், தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்த 65 வயது மற்றும் 75 வயதுடைய இரண்டு முதியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து ஸ்பெயினில் இருந்து டெல்லி, பெங்களூரு வழியாக கோவை வந்த 32 வயது பெண், துபாயில் இருந்து மதுரை வந்த 43 வயதுடைய ஆண், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 64 வயதுடைய பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். லண்டனில் இருந்து சென்னை வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயது இளைஞர், லண்டனில் இருந்து திருப்பூர் வந்த 48 வயதுடைய ஆண், மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஆகிய மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேரும் சென்னை ராஜிவ்காந்தி, திருப்பூர் இஎஸ்ஐ, மதுரை ராஜாஜி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ செல்லாதவர். அப்படியிருந்தும் அவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா  தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய 74 வயது முதியவருக்கும், 52 வயது பெண்ணுக்கும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல ஸ்விட்சர்லாந்தில் இருந்து வந்த 25 வயதான பெண்ணுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: