சிலை மோசடி விவகாரம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவர் சிலை செய்வதில் நடைபெற்ற மோசடி விவகாரம் தொடர்பாக கோயில் செயல் அலுவலர் முருகேசன் நேற்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலில் 117 கிலோ எடை கொண்ட சோமாஸ்கந்தர் சிலை இருந்தது. இந்தச் சிலை சேதமடைந்ததைத் தொடர்ந்து புதிதாகச் சிலை செய்யப்பட்டது. புதிதாகச் செய்யப்பட்ட சிலையில் தங்கம் சேர்ப்பதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் அடிப்படையில் சிலை செய்வதில் 5.75 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தானிகர் ராஜப்பா மற்றும் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கரன், பரத்குமார், வினோத்குமார், சுவாமிமலை மாசிலாமணி ஸ்தபதி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும் பல்வேறு ஆய்வுகளும் நடைபெற்றன. இந்த ஆய்வில் புதிதாக செய்யப்பட்ட சிலையிலும், பழைய சிலையிலும் தங்கம் இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக கோயில் ஸ்தானிகர் ராஜப்பா கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பணி ஆணையர் கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் கோயில் செயல் அலுவலர் பொறுப்பில் இருக்கும் முருகேசன் நேற்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வரும் மார்ச் 31ம் தேதி செயல் அலுவலர் முருகேசன் ஓய்வுபெற உள்ள நிலையில் நேற்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: