பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் மெரினா வணிக நகரம் அமைக்கப்படும்: துணை முதல்வர் அறிவிப்பு

சென்னை:  சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாரியத்திற்கு சொந்தமான ₹854.12 கோடி மதிப்பீட்டிலான 153.69 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளது. சென்னை, அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் ₹141.05 கோடி மதிப்பீட்டில், அரசு ஊழியர்களுக்கு 408 குடியிருப்புகள் கட்டவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சென்னை, பாடிகுப்பத்தில் 182 குடியிருப்புகள், ₹90 கோடி மதிப்பீட்டில் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு  

வருகிறது.சென்னையின் பிரதான இடமான பீட்டர்ஸ் காலனியில், 3.84 ஏக்கர் நிலப்பரப்பில் அதிக தரைப்பரப்பு குறியீட்டுடன், ₹487.00 கோடியில் பன்னடுக்கு மாடிகளை கொண்ட அலுவலக மற்றும் வணிக வளாகத்தை கட்டவும், கோயம்பேடு அருகே அரும்பாக்கத்தில் 7.14 ஏக்கர் நிலப்பரப்பளவில், 304 குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் உள்ளடங்கிய பன்னடுக்கு மாடி கட்டிடத்தை ₹697.00 கோடி மதிப்பீட்டில் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு

வருகிறது.

மேலும் சென்னை மாநகருக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கும் வகையில் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பட்டினப்பாக்கத்தில், 25.16 ஏக்கர் நிலப்பரப்பில், மாபெரும் வர்த்தக மையம், உணவு விடுதிகள், கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட வணிக வளாகம் உள்ளடங்கிய மெரினா வணிக நகரம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, சென்னை நந்தனத்தில் நிதி நகரம் மற்றும் பன்னாட்டு நிதி மையம் ஆகியவற்றுக்கான தமிழ்நாடு வர்த்தக மையம் ஒன்றை உருவாக்க அரசு உத்தேசித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களது கோரிக்கையை பரிசீலித்து, வீட்டுவசதி வாரியம் மூலமாக விதிமுறைகளுக்கு உட்பட்டு, சென்னையில் சொந்த குடியிருப்பு கட்டி தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்

படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வட்டி சலுகை பெற 6 மாதம் அவகாசம்

வீட்டு வசதி வாரியத்தில் மனைகளும்,  வீடுகளும் பெற்ற ஒதுக்கீடுதாரர்கள், வாரியத்திற்கு கட்ட வேண்டிய தவணை  தொகை தவறிய காரணத்தால், அதற்கான அபராத வட்டி, முதலுக்கான வட்டி என வட்டி  தொகை சுமையாக சேர்ந்துவிட்ட நிலையில், இந்த வட்டி தொகையை தள்ளுபடி செய்து  தாங்கள் விற்பனை பத்திரம் பெற்றிட உதவிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை  வைத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த அரசு, வட்டி தள்ளுபடி திட்டத்தின்  கீழ் இவர்களுக்கு உதவி, விற்பனை பத்திரம் வழங்கிட ஆணையிடப்பட்டது. இந்த  வட்டி சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் திட்டத்தின் கால அவகாசத்தை மேலும் 6  மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: