கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 20,000 சதுர அடியில் பைக், கார் பார்க்கிங்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 20 ஆயிரம் சதுர அடியில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது

:* சென்னை நெற்குன்றத்தில் 570 குடியிருப்புகள் ₹419.56 கோடி மதிப்பீட்டில் சுயநிதி திட்டத்தின்கீழ் கட்டப்படும். * திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ₹15.40 கோடி மதிப்பீட்டில் 286 மனைகள் மேம்படுத்தப்படும்.

* வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ₹5.56 கோடி மதிப்பீட்டில் 135 மனைகள் மேம்படுத்தப்படும்.

* சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில்  ₹19.16 கோடி மதிப்பீட்டில் 277 மனைகள் மேம்படுத்தப்படும்.

* கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2,102 மனைகள் ₹117.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

*  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 978 மனைகள் ₹36.16 கோடி மதிப்பீட்டில்  மேம்படுத்தப்படும்.

* சென்னையில் பெசன்ட்நகர், திருவான்மியூர் மற்றும் சி.ஐ.டி. நகர் ஆகிய இடங்களில் ₹139.00 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்படும்.

* சென்னை திருமங்கலம் பகுதியில் 0.40 ஏக்கர் நிலப்பரப்பில் ₹ 20 கோடியில் 50,000 சதுர அடி கொண்ட வணிக வளாகம் கட்டப்படும்.

*  கோயம்பேடு மொத்த அங்காடி வளாகத்திற்குள் 20,000 சதுர அடி பரப்பளவு கொண்ட காலியிடத்தில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய வசதி கொண்ட பன்மட்ட வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10,758 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்

தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023, குடிசை பகுதிகளற்ற நகரங்கள் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீட்டுவசதி  திட்டத்தின் நிதி ஆதாரத்தை பயன்படுத்தி சென்னை மற்றும் இதர நகரங்களில்  10,758 அடுக்குமாடி குடியிருப்புகள் ₹1131.51 கோடி மதிப்பீட்டில்  கட்டப்படும்.

Related Stories: