சொந்த ஊர் செல்வதற்கு வழியின்றி நடைபாதையில் பரிதவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்

பெரம்பூர்: சென்னையில் கட்டிட வேலை, ஓட்டல், சாலைப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வடமாநிலத்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்களில் ஓட்டலில் வேலை செய்பவர்களுக்கு  தங்குமிடம், சாப்பாடு இவைகள்  ஓட்டல் நிர்வாகம் சார்பில் அளிக்கப்படுகிறது. ஆனால், கட்டிட வேலை  செய்பவர்களுக்கு முறையான இடவசதி செய்து தரப்படுவதில்லை.  இதனால் வேலை நடைபெறும் இடத்திற்கு அருகே குடிசைகள் அமைத்தும், சாலையோரம் தற்காலிக குடியிருப்புகள் அமைத்தும் வசித்து  வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் உள்ள வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஆனால், பேருந்துகள் கிடைக்காமலும், ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும் என்ன  செய்வதென்று தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இவ்வாறு சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பவர்களை மாநகராட்சி நிர்வாகம் மீட்டு சமுதாய கூடங்களில் தங்க வைத்துள்ளனர்.தெலங்கானா சூரப்பேட்டை ஜில்லா என்ற பகுதியை சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்டோர்  வியாசர்பாடி, புளியந்தோப்பு, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால்  இவர்களை சொந்த ஊருக்கு செல்ல கட்டுமான நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. இதனால், இவர்கள்  நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றபோது, ரயில்கள் இயக்கப்படாததால், என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். இவர்களை அழைத்து சென்று சமுதாய கூடத்தில் தங்க வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் தாங்கள் தங்கி வந்த இடத்திற்கு வந்து விட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ரயில்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளதால் எங்களது ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்.  கட்டிட வேலை நடந்தால் தினமும் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும். அதனை வைத்து வாழ்ந்து வந்தோம். தற்போது வேலையும் நிறுத்தப்பட்டு எங்கள் சொந்த  ஊருக்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் சொந்த ஊருக்கு திரும்ப அதிகாரிகள் வழிவகை செய்ய  வேண்டும். இல்லையெனில் சமுதாய கூடத்தில் தங்க வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: